டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இத்தகைய சூழலில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவ் மகள் கவிதா இல்லத்தில் இன்று (15.03.2024) நாள் முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கவிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலங்கானா மாநிலம் முழுவதும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் சார்பில் வெயிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், கவிதா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கே.டி.ஆர். ராவ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “ சோதனை நடந்து முடிந்துள்ளது. கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவிதா வர மறுக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.