Skip to main content

பட்டாசு ஆலையில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A fire at a firecracker factory Tragedy that 6 people issue

மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் பணியில் இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் அருகே உள்ள 60 வீடுகளுக்கு தீ பரவியதால் அசாதரண சூழல் நிலவி வருகிறது. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி அளித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட மத்தியப் பிரதேச அமைச்சர் உதய் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், “மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேசினேன். காயமடைந்தவர்கள் ஹோஷங்காபாத் மற்றும் போபாலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மைக் குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
fire in Delhi Public damage

டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கில் நேற்று (21.04.2024) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கில் இருந்து விஷவாயு உற்பத்தியாகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு தொண்டையில் எரிச்சல், புகையால் இருமல் வந்தது. இந்த தீயால் மாசு ஏற்பட்டது. இதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்ளூரில் ஒருவர் கூறும்போது, “இன்று கண்விழித்து பார்த்தபோது அந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. சரியாக மூச்சு விட முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது தீ விபத்துகள் தொடரும். அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து  தீயை அணைக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.