
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. இதனையடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
அதே சமயம் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று (16.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘இந்து அறநிலையத்துறையில் சட்டத்தின்படி இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது, வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது?.
இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை மற்றும் வாரியங்களில் நியமிப்பீர்களா?. இதற்கு வெளிப்படையாக மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். பயனாளிகள் அடிப்படையிலான வக்ஃப் சொத்துக்களை நீக்கினால் அது பிரச்சனையாக இருக்கும்’ என மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, “ஆலோசனை குழுவில் வேறு மதத்தைச் சேர்ந்தவரை இந்து மத கோயில் நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக்கலாமா?. வக்ஃப் சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?. வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என மத்திய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வக்ஃப் சட்டம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் நடைபெற்றது.