இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில், ஜே.பி. நட்டா, சோனியா காந்தி உட்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களில் நேற்று (27-02-24) தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தலா ஒருவரும் போட்டியிட்டனர்.
காலை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மாலை அறிவிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் வேட்பாளர்கள் அஜய் மக்கான், சையத் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். அதே போல், பா.ஜ.க வேட்பாளர் நாராயண்சா பாண்டேகாவும் வெற்றி பெற்றார். ஆனால், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களை நம்பி களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், பெங்களூர் யஷ்வந்தபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.டி சோமசேகர், காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கர்நாடகா சட்டசபையான பெங்களூர் விதானசவுதாவில் காங்கிரஸ் கட்சியினர், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேனை சூழ்ந்து அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கிருந்த சிலர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவை இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றியுள்ளது. பயங்கரவாதிகளை சகோதரர்கள், அப்பாவிகள் என்று முத்திரை குத்திய காங்கிரஸின் சமாதான அரசியலின் விளைவு கர்நாடகாவில் மீண்டும் மீண்டும் தெரிகிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோருகிறோம். காங்கிரஸின் தேச விரோத நடவடிக்கைகளுக்கு கர்நாடகாவை சோதனைக் களமாக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று பதிவிட்டுள்ளது.