இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.
அதில், “2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. இதன் மூலம் நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். எனவே மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் 2047இல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம் ஆகும். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஏழைககள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 4 தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” எனத் தெரிவித்தார். முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.