டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, தொழிலாளர் நலனுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடிக்கான சலுகை தொகுப்பை அறிவித்தார்.
உஜ்வாலா திட்டத்தில் பெண்களுக்கு மூன்று மாதம் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மத்திய அரசின் அறிவிப்பால் 8 கோடி பெண்கள் பயனடைவார்கள். ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதத்துக்கு தலா ரூபாய் 500 வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கான கடன் ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 பேருக்குக் குறைவான ஊழியரை கொண்ட நிறுவனம், ஊழியர்கள் மூன்று மாதத்துக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தத் தேவையில்லை; மத்திய அரசே மூன்று மாதத்துக்கு பி.எப் தொகையைச் செலுத்தும். மாத ஊதியம் ரூபாய் 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும். பி.எப் வைப்பு நிதியில் மூன்று மாத ஊதிய அளவோ அல்லது 75% சதவிகிதத்தையோ முன்பணமாக பெறலாம். முன் பணத்தைத் திரும்ப செலுத்தத் தேவையில்லை; இதற்காக பி.எப்.விதியில் திருத்தம் கொண்டு வரப்படும். கட்டடத் கட்டுமான தொழிலாளருக்காக ரூபாய் 31,000 கோடி சிறப்பு நிதி உள்ளது; இதை மாநில அரசே பயன்படுத்தலாம்." இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.