தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறது மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவின் முதல்வராகியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, சிவசேனாவின் தேர்தல் வியூக வல்லுனராக செயலாற்றிய பிரசாந்த் கிஷோரை, தனது முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை.
மாநில நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தவ்தாக்கரே கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருக்கு செம டோஸ் கொடுத்திருக்கும் சம்பவம்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. இது குறித்து விசாரித்தோம்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 124 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா கட்சியால், வெறும் 56 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்த தேர்தலில் சிவசேனாவுக்காக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார் ஐ.-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர்..
பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனைகளின்படியே தேர்தல் களத்தில் களமாடியது சிவசேனா. 124 இடங்களில் போட்டியிடும் சிவசேனா, 115 இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கையை கொடுத்து, தனது யோசனைகளின்படிதான் தேர்தல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என கட்டளையிட்டிருந்தார் கிஷோர். அதன்படியே சிவசேனா தலைமையும் நடந்துகொண்டது.
ஆனால், பிரசாந்த் கிஷோர் உறுதி தந்ததுபோல் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. வெறும் 56 இடங்களை மட்டுமே கைப்பற்றியது சிவசேனா. முந்தைய சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களை சிவசேனா கைப்பற்றியிருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் அதைவிட 7 இடங்கள் குறைந்ததில் தாக்கரே அப்-செட்டானார். சிவசேனாவின் இந்த பின்னடைவை தாக்கரேவால் ஜீரணிக்க முடியவில்லை.
இது குறித்து மூத்த தலைவர்களிடம் தாக்கரே விவாதித்த போது, ’’ சிவசேனாவின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்ததுதான் தவறு. அவரது வியூகம் சமீபகாலமாக எந்த மாநிலத்திலும் எடுபடவில்லை. அவர் போட்டுக்கொடுத்த யோசனைகள் அனைத்துமே தேர்தல் களத்தில் நமக்கு எதிராக மாறிவிட்டன. மாநிலத்தின் கள நிலவரம் அறிந்தவராக அவர் இல்லை. அதனால் நமது பின்னடைவுக்கு முழு காரணம் பிரசாந்த் கிஷோரின் யோசனைகள்தான். அவரது யோசனைகளை புறந்தள்ளியிருந்தால் 90 இடங்களுக்கு மேல் ஜெயித்திருப்போம் ‘’ என விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் சிவசேனாவின் மூத்த தலைவர்கள். இதனைத் தொடர்ந்து கிஷோரை தொடர்புகொண்டு செம டோஸ் கொடுத்துள்ளார் தாக்கரே.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு அக்கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரானார் உத்தவ்தாக்கரே. அவரது பதவியேற்பு நிகழ்வை மிக பிரமாண்டமாக நடத்தியது சிவசேனா. அந்த விழாவுக்கு பிரசாந்த் கிஷோர் அழைக்கப்படவில்லை. கிஷோரை அழைப்பது குறித்து சிவசேனா தலைவர்கள் சிலர் தாக்கரேவிடம் கேட்டபோது, அவரை அழைக்க வேண்டாம் என கடுமையாக சொல்லிவிட்டதாக மும்பை அரசியலில் எதிரொலிக்கிறது.
தாக்கரே தன்னை அழைக்காததில் ஆத்திரமடைந்த பிரசாந்த் கிஷோர், முதல்வராகியுள்ள உத்தவ்தாக்கரேவுக்கு வாழ்த்துகளைச் சொல்லாமல், சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனையும் தாக்கரேவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் சிவசேனா தலைவர்கள். இந்த நிலையில்தான், மும்பை அரசியலில் இனி தனக்கு மரியாதை இருக்காது என கருதி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மீது பார்வையைத் திருப்பியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். எந்த கட்சிகள் அவரது வலையில் விழப்போகிறதோ ? என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.