குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மோர்பி தொங்கு பால விபத்தில் பாஜக எம்.பியான மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
மோர்பி பாலம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “என் வாழ்க்கையில் இது போன்ற வலியை நான் அனுபவித்ததில்லை. ஒரு புறம் இதயம் முழுவதும் வலி நிறைந்துள்ளது. மறுபுறம் கடமையைச் செய்வதற்கானப் பாதை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் பாதுகாக்கவும் எவ்வித அலட்சியமும் காட்டப்படமாட்டாது” எனக் கூறி இருந்தார்.
மோர்பி பாலம் விபத்து குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையில் இந்த விபத்து குறித்துப் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதிச் சான்றிதழை மாநகராட்சி வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில், இந்த பால விபத்தில் தொடர்புடையதாகக் கூறி 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தொங்கு பாலத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட ஒரேவா நிறுவனத்தில் மேலாளர்களில் ஒருவரான தீபக் பரேவும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரேவா நிறுவனத்தின் சார்பில் ஆஜராக மாட்டோம் என மோர்பி வழக்கறிஞர் சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட தீபக் பரே கடவுள் விருப்பப்படி நேர்ந்த எதிர்பாராத விபத்து எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தகுதியான பொறியாளர்கள் பாலப் புனரமைப்பு பணிகளில் ஈடுபடவில்லை. எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படும் போது உயிர்காக்கும் சாதனங்கள் எதுவும் அங்கு இல்லை. மேலும், தடயவியல் நிபுணர்களின் விசாரணையில், தொங்கு பாலத்தில் கயிறாகக் கட்டப்பட்டு இருந்த கேபிள் வயர்களில் சில இடங்களில் துருப்பிடித்து இருந்ததும் கம்பிகளை இலகுவாக்க எண்ணெய், கிரீஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படாமல் அதில் பெயிண்ட் அடித்ததும் தெரியவந்தது.