காஷ்மீரில் தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு பின்பு அமைதி திரும்பி இருந்தாலும் காஷ்மீரின் தெற்கு காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்து வந்தது. இந்நிலையில் குத்வானி பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் பாசித் தர் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாசித் தர்ருடன் அவனது கூட்டாளி ஒருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டதாகக் காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விகே பிர்தி சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ராணுவப் படை வீரர்கள் அணிவகுப்பாக சென்ற பொழுது தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர். அதில் ஒரு விமானப் படை அதிகாரி கொல்லப்பட்டிருந்தார். இதனால் அந்தப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் டி.ஆர்.எஃப் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவன் பாசித்தர் மற்றும் அவனுடைய கூட்டாளி என இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தேடுதல் வேட்டை முற்று பெற்றுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.