18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலின் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகப் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் நாடு முழுவதும் உள்ள 150 மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா அழைத்து பேசியுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருக்கும் ஆட்சியர்களை அழைத்து பேசியிருப்பது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான மிரட்டல். பா.ஜ.க எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. மக்களின் விருப்பம் வெல்லும், ஜூன் 4 ஆம் தேதி, மோடி, அமித் ஷா மற்றும் பா.ஜ.க வெளியேறுவார்கள். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்” என்று கூறினார்.
ஜெய்ராம் ரமேஷின் இந்தக் கருத்துக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்குத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ‘வதந்திகளைப் பரப்புவதும், அனைவரையும் சந்தேகிப்பதும் சரியல்ல. மாவட்ட ஆட்சியர்களோ, தேர்தல் அதிகாரிகளோ என அனைவரிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?. இதைச் செய்தது யார் என்று சொல்லுங்கள். அப்படிச் செய்தவர்களைத் தண்டிப்போம். வாக்குகளை எண்ணும் முன் விவரங்களைச் சொல்ல வேண்டும்.
வாக்கு எண்ணும் செயல்முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரி மீது செலுத்தப்படும் ஒரு புனிதமான கடமையாகும். மேலும் ஒரு மூத்த, பொறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரின் இத்தகைய பகிரங்க அறிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன, எனவே, பெரிய பொது நலனுக்காக உரையாற்றப்பட வேண்டும்’ என்று கூறியது. மேலும், அந்த 150 ஆட்சியர்களின் விவரத்தை இன்று 7 மணிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.