மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கடந்த இரண்டு நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "திட்டமிட்டபடி உரிய நேரத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும். ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, வேட்பாளர்கள் தங்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சொத்து விவரங்களையும் வழங்க வேண்டும். வருமான வரித்துறை இது குறித்து ஆய்வு செய்து, தவறான தகவல்கள் இருந்தால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் அது குறித்து பதிவிடப்படும். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கால்பந்து போல நடத்தப்படுகிறது. தங்கள் ஜெயித்தால் இயந்திரம் சரியாக உள்ளது எனவும், தோல்வி அடைந்தால் இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது எனவும் கூறுகின்றனர்" என கூறினார்.