உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ள அவரின் உடலின் அருகே, ஒரு நாட்டு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கறிஞர், பூபேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பூபேந்திர சிங் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சுடப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த நபர் தனியாக இருந்ததாகவும், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் ஷாஜகான்பூர் காவல்துறை கூறியுள்ளது.
இதற்கிடையே காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர் கொல்லப்பட்ட சம்பவம், பாஜக ஆட்சியில் நிலவும் சட்ட ஒழுங்கின் சூழ்நிலையை காட்டும் விதமாக அமைந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உ.பி.யின் ஷாஜகான்பூர் மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டது மிகவும் வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. இது இங்குள்ள பாஜக அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கின் நிலையையும், அது தொடர்பான அவர்களின் கூற்றையும் வெளிப்படுத்துகிறது. இப்போது இறுதியாக, உ.பி.யில் யார்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது? அரசு இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.