சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுபவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுபவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று(6.9.2023) பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அலுவல் பூர்வமான கூட்டம் நிறைவடைந்த பின், அமைச்சர்களுடன் பேசிய பிரதமர் உரையாடினார். அப்போது, எந்த மதத்தையும் தவறாகப் பேசக்கூடாது என்றும், அதேசமயம் சனாதன தர்மம் குறித்து இழிவாகப் பேசுபவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களுக்குப் பிரதமர் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.