ஒன்பது மாதங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவரைக் கொன்றுவிட்டு, போலீசிடம் சிக்காமல் தண்ணிக்காட்டிய கொலைகாரனை, ஒரு செல்போன் பிடித்துக் கொடுத்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த ரூபா லதா என்ற 72 வயது மூதாட்டி, தைமூர் நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக, சென்ற ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி இரவு ஒரு ஆட்டோவில் பயணம்செய்கிறார். கொஞ்ச தூரம் சென்றதும் மாற்றுப் பாதையில் சென்ற ஆட்டோ டிரைவர் மஜித், மூதாட்டியின் நகைகள், பணப்பை, செல்போன் உள்ளிட்டவற்றைத் திருடிவிட்டு, அவரை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு தப்பியோடுகிறார். பின்னர் சவிதா விஹார் மேம்பாலத்தின் அருகே பிணமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் கொலை மர்மமாகவே இருந்தது.
இதற்கிடையே, மூதாட்டியைக் கொன்றுவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவர் மஜித், இதுபற்றி இன்னொரு ஆட்டோ டிரைவரான கோவிந்த்பாலிடம் விவரித்திருக்கிறார். அப்போது, மூதாட்டியின் செல்போனை வைத்திருந்தால் சிக்கிக் கொள்வாய். அதனால் அதைத் தூக்கிவீசு என்று கோவிந்த்பால் ஐடியா தந்திருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன மஜித், செல்போனைத் தூக்கிவீச அதை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டார் கோவிந்த்பால்.
அதன்பிறகு அந்த செல்போன் சுவிட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்ததால், கொலையாளியைப் பிடிப்பதில் போலீசுக்கு தாமதம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த செல்போனை உறவினர் ஒருவரிடம் கோவிந்த்பால் கொடுத்துவிட, அவர் அதில் ஒரு சிம்கார்டைப் பொருத்தி ஆன் செய்திருக்கிறார். உடனடியாக போலீசுக்கு தகவல் கிடைத்ததும், நம்பரை ட்ரேஸ் செய்து கோவிந்த்பாலை கைதுசெய்து, பின்னர் மஜித்தை பிடித்திருக்கிறார்கள்.
குற்றம்செய்தால் எப்போது வேண்டுமானாலும், எந்த ரூபத்திலும் சிக்கிவிடுவோம் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த செய்தி.