
கேரளாவில் கருவுற்ற யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துக் கொடுக்கப்பட்டு, அந்த யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் இமாச்சலப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜன்துட்டா பகுதியில் கடந்த மே 26 அன்று கருவுற்ற பசு ஒன்று கோதுமை மாவை உருண்டையை உட்கொள்ள முயன்றபோது, அந்த உருண்டை அதன் வாயில் வெடித்துள்ளது. இதில் வாய்ப்பகுதி கிழிந்து அந்த பசுவிற்கு ரத்தம் வழிந்துள்ளது. இதனைப் பார்த்து மாட்டின் அருகில் வந்த பார்த்த அதன் உரிமையாளர், கோதுமை உருண்டையில் வெடி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாடு பயிர்களை மேய்ந்ததற்காகத் தனது பக்கத்து வீட்டுக்காரர், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு பந்தை மாட்டிற்குக் கொடுத்திருக்கலாம் என மாட்டு உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஐபிசி பிரிவு 286, விலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் சட்டத்தின் 11வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் திவாகர் சர்மா தெரிவித்துள்ளார்.