இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கரோனாவை பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு, மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா, கரோனா தடுப்பூசி கரோனா தொற்று ஏற்படுவதை தடுக்காது என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "அனைத்து கரோனா தடுப்பூசிகளும், அவை இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து அல்லது சீனா என எந்தநாட்டை சேர்ந்தவையாக இருந்தாலும், அவை முதன்மையாக நோயின் தன்மையை மாற்றக்கூடியவை. அவை தொற்று ஏற்படுவதை தடுக்காது. முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) டோஸ்கள் முதன்மையாக நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்கவும், மருத்துவமனையில் சேர்க்கப்படுத்தல் மற்றும் மரணத்திற்கான வாய்ப்பையும் குறைக்கவும் செலுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து "தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்னரும் பின்னரும் முகக்கவசங்களை பயன்படுத்துவது அவசியம். மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு தனிமை என்பது கரோனா சிகிச்சை முறையில் முக்கிய தூணாக இருக்கிறது" எனவும் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.