உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பெரும்பாலானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 38 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் மாளிகையில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குக் கரோனா இல்லை எனச் சோதனை முடிவு வெளியாகியுள்ளது.