
கர்நாடகா மாநிலம் கஜேந்திரகடா பகுதியில் உள்ள லக்கலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மதரா (29). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் கங்கம்மாவும் (23) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கங்கம்மா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், சாதி மீறி திருமணம் செய்து கொண்டதால் கங்கம்மாவின் சகோதர்கள் நான்கு பேர், ரமேஷ் மற்றும் கங்கம்மாவின் தலையில் கல்லை எறிந்து கொடூரமாக கொலை செய்தனர். கங்கம்மாவின் சகோதரர்கள், கடந்த 2019ஆம் ஆண்டு செய்த இந்த ஆணவக் கொலையால் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இளம் தம்பதியரை ஆணவக் கொலை செய்த வழக்கு இன்று கடக் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கம்மாவின் சகோதரர்களான சிவப்பா ரத்தோட், ரவிகுமார ரத்தோட், ரமேஷ் ரத்தோட், பரசுராம ரத்தோட் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.