90களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, கடந்த 1998 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்பு அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவிற்கு பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்பு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ரோஜா, ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை ரோஜா நடத்தினார். இதற்கு அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ.150 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். இந்த விளையாட்டு போட்டு மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், ‘ஆடுதாம் ஆந்திரா’ விளையாட்டுப் போட்டியில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி ரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர சி.ஐ.டி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இந்த ஊழல் புகார் காரணமாக ரோஜா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த விஜயவாடா காவல்துறைக்கு ஆந்திர சி.ஐ.டி போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதனால் ஊழல் புகார் காரணமாக எந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் ரோஜா விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.