ரயில் பயணங்களின் போது ஏசி வகுப்புகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பின் பயணிகள் தங்கள் பயணத்தை ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணமாக இதுவரை பிடிக்கப்பட்ட தொகையில் இனிமேல் 5% ஜிஎஸ்டி சேர்த்து பிடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன் படி முதல் வகுப்பு ஏசி பெட்டியில் முன் பதிவு செய்து ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணம் 240 ரூபாயுடன் சேர்த்து 5% ஜிஎஸ்டியுடன் 252 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் முன் பதிவு செய்து ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணம் 200 ரூபாயுடன் சேர்த்து 5% ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் எனவும், மூன்றாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணம் 180 ரூபாயுடன் 5% ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு இருக்கை பயணச்சீட்டு முன்பதிவு ரத்து செய்தால் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.