Skip to main content

காளைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பங்குச்சந்தைகள்! ஆனாலும் பயப்பட வேண்டாமாம்...!!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

coronavirus issues investors mumbai sensex, nifty details

 

நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் நிப்டி 14,000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 48,000 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சம் தொட்டிருந்தன. இந்நிலையில், புதன்கிழமையன்று (ஜன. 6, 2021) திடீரென்று சந்தைகளில் நிலையற்றத் தன்மை தென்படவும் முதலீட்டாளர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி, புதனன்று காலை 14,240 புள்ளிகள் என்ற நல்ல நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. ஒருகட்டத்தில் இன்ட்ராடே சாதனை அளவாக 14,244.15 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் சிறிது நேரத்தில் சந்தை மீண்டும் வேகமாக சரியத் தொடங்கியது.

 

குறைந்தபட்ச அளவாக 14,039 புள்ளிகள் வரை இறங்கியது. வர்த்தக நேர முடிவில் 14,146 புள்ளிகளாக இருந்தது. இது, முந்தைய நாளைக் (ஜன. 5) காட்டிலும் 53.25 புள்ளிகள் குறைவாகும். நிப்டியின் 50 முக்கியப் பங்குகளில், 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், 26 நிறுவனப் பங்குகளின் விலை சரிவுடனும் வர்த்தகம் ஆகின. 

 

அதேபோல், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 48,616 புள்ளிகள் என்ற அதிகபட்ச நிலையுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே 47,864 புள்ளிகள் வரை சரிந்தது. இறுதியில், 48,174 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. முதல் நாள் வர்த்தகத்துடன் (48,437) ஒப்பிடுகையில் இது 263.72 புள்ளிகள் வீழ்ச்சியாகும். சென்செக்ஸில் பங்குகளின் மதிப்பைக் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு வளர்ச்சி கண்டன. 16 நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 

 

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட பின்னடைவே இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. புதிய வகை கரோனாவால் ஐரோப்பிய நாடுகள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன. உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் பங்குச்சந்தைகளில் நிலையற்றத்தன்மை உருவானதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

 

ஒருவேளை, நிப்டி 13,950 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம் சென்றிருந்தால் அடுத்து வரும் நாள்களும் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கும். கடந்த மூன்று வர்த்தக தினங்களும் ஏற்றத்தில் இருந்த நிலையில், திடீரென்று புதனன்று கரடியின் பிடியில் சந்தை சிக்கிக்கொண்டது, முதலீட்டாளர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர், கிடைத்த வரை லாபம் என்ற ரீதியில் பங்குகளை விற்கத் தொடங்கினர். இத்தகைய திடீர் நிலையற்றத் தன்மையை பங்குச்சந்தை நிபுணர்கள், முதலீட்டாளர்கள் அந்தரத்தில் தொங்கும் மனிதனின் நிலை என்கிறார்கள்.


இந்த திடீர் நிலையற்றத் தன்மை காளைகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றாலும்கூட, அண்மைக் காலங்களில் பலமுறை இந்த கணிப்பு பொய்த்தும் போயிருக்கிறது என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். 

 

''நிப்டி 13,950 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து இருந்தால், காளைகளை வீழ்த்தி கரடிகளின் பிடியில் சந்தை சிக்கிக் கொண்டதாக கருதலாம். இன்ட்ராடே வர்த்தகத்தில் நிப்டி 14,039 புள்ளிகளாக சரிந்தாலும் பின்னர் படிப்படியாக உயர்ந்து 14,146.30 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்திருப்பது மோசமான சமிக்ஞை அல்ல,'' என்கிறார் டெக்னிகல் ரிசர்ட் மற்றும் டிரேடிங் அட்வைசரி நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர், பங்குச்சந்தை ஆய்வாளர் மஸார் முஹம்மது. 

 

மேலும், அடுத்தடுத்த வர்த்தக நாள்களில் நிப்டி 14,244 புள்ளிகளில் இருந்து மேலே உயரும்பட்சத்தில் 14,450 புள்ளிகள் வரை செல்லக்கூடும்; சரிவைச் சந்திக்கும்பட்சத்தில் 14,000 புள்ளிகள் வரை இறங்கலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. 

 

சந்தை சரிவில் இருந்தபோதும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், வேதாந்தா, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், கண்டெய்னர் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன, இந்திரபிரஸ்தா காஸ், ஹிண்டால்கோ, கெயில், பாட்டா இண்டியா, வோல்டாஸ், யுபிஎல், மஹாநகர் காஸ், கிராசிம், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஹேவல்ஸ் மற்றும் எல் அன்டு டி ஆகிய நிறுவனப் பங்குகள் ஓரளவு ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின. 

 

அதேநேரம், ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிரமல் என்டர்பிரைசஸ், பஜாஜ் பைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் டாபர் நிறுவனப் பங்குகளின் விலைகள் பெரும் சரிவைக் கண்டன.

 

சார்ந்த செய்திகள்