நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவர்களுக்கும் விடுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளில் மக்களவை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல் பதவி காலம் முடிந்து விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் உறுப்பினர்களை விடுதிகளை விட்டு காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 2017- ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய விடுதிகளை கட்டுவதற்கு ரூபாய் 92 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த கட்டிடத்தை கட்டும் ஒப்பந்தத்தை "சென்ட்ரல் பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மெண்ட்" நிறுவனம் மேற்கொண்டது. வடக்கு டெல்லியில் அமைந்துள்ள பகுதியில் 32 பிளாட்கள் கட்டும் பணியை இந்த நிறுவனம் முடித்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட 80 கோடி செலவில் எம்.பிக்களுக்கான தங்கும் விடுதியை கட்டி முடித்துள்ளது. 24- மணி நேரமும் பாதுகாப்பு நிறைந்த வடக்கு டெல்லி பகுதியில் எம்பிக்கள் விடுதி கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியும் நான்கு அறைகளை கொண்டுள்ளது. அதே போல் இரண்டு கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் எது வந்தாலும் கட்டிடம் தாங்கும் வகையில் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத்தலைவர் மளிகையில் உள்ள பசுமையான சூழலை போல் எம்பிக்கள் தங்கும் விடுதியில் ஏற்படுத்தியுள்ளது கட்டுமான நிறுவனம். இந்த விடுதிகள் அனைத்திலும் எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களவை செயலரிடம் எம்.பிக்கள் தங்கும் விடுதி சாவியை ஒப்படைத்த நிலையில் விரைவில் இந்த விடுதிகள் எம்.பிக்களிடம் வழங்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது.