சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மஜத, தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. ஆனால் பாஜக, 25 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. பாஜக ஆதரவு சுயேச்சை ஓரிடத்தில் வென்றார். இந்த மிகப்பெரிய தோல்விக்கு பிறகு காங்கிரஸ், மஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மே 29-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 1,221 வார்டுகளில் காங்கிரஸ் 509 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளில் வென்றது. பாஜக 366 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. மக்களவை தேர்தலில் மாபெரும் தோல்வியை சந்தித்த இந்த கூட்டணிக்கு இந்த மெகா வெற்றி ஆறுதலை தந்துள்ளது என கூறப்படுகிறது.