இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில, யூனியன் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், ஒடிஷா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும், தடுப்பூசிகளை தங்களது மாநிலத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இரவு நேர ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 6,000 செலுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும். புதிய தடுப்பூசிகளை அனுமதி அளிக்க நடவடிக்கை தேவை" என்று வலியுறுத்தியுள்ளார்.