நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்றது.
அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று (19-09-23) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு ஆதாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில், சோனியா காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (19-09-23) புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ , மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்திரி, “ எங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நகல்களை கொண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்தோம். ஆனால், அந்த நகலின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் இல்லை. 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டியிருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், தற்போது இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. மத்திய அரசு இந்த மாற்றத்தை மிகவும் புத்திசாலித்தனமாக செய்துள்ளனர். மேலும், அவர்களின் நோக்கம் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முயன்றேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.