மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ராகுலிடம் இந்த முடிவை திரும்ப பெறுமாறு பல முறை பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனாலும் தன் முடிவிலிருந்து பின்வாங்காத ராகுல், பதவி விலகுவதில் உறுதியாக இருப்பதாகவும், புதிய தலைவரை கட்சியின் உயர்மட்ட குழுவே தேர்ந்தெடுக்கும் எனவும் கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை எனவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். இதனையடுத்து ராகுல்காந்தி தான் தலைவராக தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராகுல் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அறிவித்ததால், இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து வருகின்றனர். டெல்லி மற்றும் தெலுங்கானாவில் இருந்து கட்சியின் செயல் தலைவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 120 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளனர். ராகுல் தலைவர் பொறுப்பை தொடராமல் போனால் ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.