இந்திய எல்லைப்பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது குறித்து மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்தது. இதனிடையே கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளைக் குவித்து வந்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் மத்திய போர் பதட்டம் உருவானது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே காணொலிக்காட்சி மூலம் 12 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இதன்படி பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்படும் எனச் சீனா தெரிவித்தது. ஆனால் நேற்று லடாக் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, "இந்த நேரத்தில் மத்திய அரசு நமது நாட்டிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் அழைத்து உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசிடம் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு மாறாக சீனா நடந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.