2020 - 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய பொருளாதாரம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ப.சிதம்பரம், "பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை இந்த ஆண்டும் நம்முடைய தேசம் உற்சாகமில்லாத ஆண்டைத்தான் எதிர்நோக்கி இருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏதேனும் போர் பதற்றம் ஏற்பட்டாலோ, அல்லது அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் இருந்தாலோ நம்மிடம் அதற்கேற்ற மாற்றுத் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் அதுமாதிரியான மாற்றுத் திட்டம் ஏதும் இருக்கிறதா?
வரும் நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் இயல்பான, சராசரி வளர்ச்சி என்பது 5 சதவீதம்தான். கடந்த 6 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது. 7-வது காலாண்டும் குறைவதைத்தான் காட்டுகிறது. நாம் இப்போதும் அடர்ந்த, இருள் நிறைந்த குகையில்தான் இருக்கிறோம். எதிர்க்கட்சியாக நாங்கள் பொருளாதாரச் சரிவுக்கான காரணங்களைக் கூறுகிறோம், பட்டியலிடுகிறோம். மத்திய அரசு அதற்கான காரணங்களைக் கூற முன்வர வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்ததற்குப் பதிலாக, ஜிஎஸ்டி வரியைக் குறைத்து, மக்களின் கைகளில் அதிகமான பணத்தைப் புழங்க வழி செய்திருக்கலாம். அப்படி செய்தால் மக்கள் அதிகளவில் முதலீடு செய்வார்கள். தவறான பண மதிப்பிழப்பு, சிந்திக்காமல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி, வங்கிகளுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி ஆகிய 3 தவறுகள்தான் நமது பொருளாதாரச் சரிவுக்குக் காரணங்கள். இந்த 3 பெரும் தவறுகள்தான் பொருளாதாரத்தை அந்தரத்தில் தொங்கவைத்துள்ளது" என தெரிவித்தார்.