
இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், கரோனா பாதிப்பு சம்மந்தமான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கரோனா பரவல் மற்றும் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும், உத்தரவுகளைப் பிறப்பித்தும் வருகிறது.
இந்தநிலையில், நேற்று (02.05.2021) இரவு உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்வதற்கான வழிமுறைகள் வேறு வேறாக இருப்பது குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், மருத்துவமனைகளில் சேர்வதற்கான தேசிய அளவிலான கொள்கை ஒன்றை உருவாக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
எதிர்பாராத சூழ்நிலையிலும் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையில், நான்கு நாட்களுக்குள் மத்திய அரசு மாநிலங்களோடு இணைந்து கூடுதல் ஆக்சிஜன் இருப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்று இரவுக்குள், டெல்லியில் ஆக்சிஜன் வழங்குவதில் இருக்கும் தட்டுப்பாட்டை சரி செய்வதாக மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பெரிய அளவிலான கூட்டங்களுக்கும் கரோனாவை வேகமாக பரப்பும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை தீவிரமாக அறிவுறுத்துவோம் என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், மக்களின் நல்வாழ்வுக்காக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என கூறியுள்ளது. "ஊரடங்கின் சமூக - பொருளாதார தாக்கத்தை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்கத்தை நாங்கள் அறிவோம். ஒருவேளை ஊரடங்கு விதிக்கப்பட்டால், அந்த சமூகங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.