இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து இன்று வரை எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநிலங்களவை எம்.பி பியூஷ் கோயல், “பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் நாடாளுமன்றம் முறையாகச் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இது பொதுப் பிரச்சனைகளை விவாதிக்கும் அரங்கம். முறையான விவாதத்தின் மூலம்தான் இந்த மாநிலங்களவைக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வர முடியும். நாடாளுமன்றம் முறையாக செயல்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்திருக்கிறார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க 176 விதியின் கீழ் விவாதம் செய்ய மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் இந்த முக்கியமான பிரச்சனையைக் குழப்புவதற்கு பதிலாக விவாதிக்க முன்வரவேண்டும். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். கேள்வி நேரம் ஒரு முக்கியமான நேரம். அதனால், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனைவரையும் அதைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சரியான முறையில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்க்கட்சிகளிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். எந்தப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்பதை ஏற்று நாங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புக்கொண்டோம். ஆனால் 267 விதியின் கீழ் விவாதம் செய்தால் மட்டுமே விவாதிப்போம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்று சபை 7 நாட்களை நிறைவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விதி 267ன் கீழ் ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டுமென்றால் அது அரிதான நிகழ்வுகளில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.