கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் கடந்த 29 ஆம் தேதி காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்ச ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி, தம்பிதுரை இந்த விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பதிலளிக்கையில், “கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல. சிலிண்டர் தானாக வெடிக்காது. குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே விபத்திற்கும், 9 பேர் உயிரிழப்பிற்கும் காரணம். வெடி விபத்து ஏற்பட்ட ஓட்டல் இருந்த பகுதிக்கு சமையல் சிலிண்டர் விநியோகமே செய்யப்படவில்லை” என பதிலளித்தார்.