நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். அதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம் ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் வழக்கம் போல் இன்று கூடியது.
அதில், தமிழகத்தில் பழங்குடியின மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் பேசியதாவது, “தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக 1,274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டில், 1,377ஆக அதிகரித்துள்ளது. அதே போல், 2022ஆம் ஆண்டில் இந்த வன்முறை வழக்குகள் 1,767ஆக அதிகரித்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2020ஆம் ஆண்டில் 22ஆகவும், 2021இல் 39 ஆகவும் அதிகரித்திருந்தது. ஆனால், 2022ஆம் ஆண்டில் இந்தக் குற்றவழக்குகள் 67ஆக அதிகரித்துள்ளது” எனப் பேசினார்.