Skip to main content

காவிரி நதி நீர் விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Cauvery water issue Hearing in the Supreme Court today

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 113 பக்க மனுவில், கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், வாதங்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும் அந்த மனுவில் எடுத்துரைக்கப்பட்டு இருந்தது.

 

மேலும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதே சமயம் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிக்கை வைக்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.