காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரள ஆளுநரின் துண்டில் தீ பிடித்த விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அகத்தரா பகுதியில் அமைந்துள்ள சபரி ஆசிரமத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சதாப்தி நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான் மரியாதை செலுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக உருவப் படத்திற்கு முன்பு ஏற்றப்பட்டிருந்த விளக்கிலிருந்து ஆளுநர் தோளில் அணிந்திருந்த துண்டில் தீ பிடித்தது. முதலில் சிறிய பொறிகள் எழுந்ததைக் கவனிக்காத ஆளுநர், தொடர்ந்து அருகிலிருந்த மற்றொரு படத்திற்கு மலர் தூவிக்கொண்டிருந்தார்.
அப்போது ஆளுநரின் துண்டில் தீ பற்றி எரிவதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததுடன், ஆளுநரின் துண்டை தோளிலிருந்து அகற்றினர். இதில், ஆளுநர் ஆரிப் முகம்மதுகானுக்கு நல்வாய்ப்பாக எதுவும் நேரவில்லை. இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்ட ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் அதன்பின்னர் திருவனந்தபுரம் திரும்பினார். கேரளாவில் ஆளுநரின் உடையில் தீ பிடித்த விவகாரம் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.