வெற்றி கொடிகட்டி படத்தில் வடிவேலு டீ கடையில் சென்று ஒட்டக பாலில் டீ கேட்பார். இன்றும் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறது அந்தக் காட்சி. அதில் வரும் காமெடியை உண்மையாகும் வகையில் அமுல் பால் நிறுவனம் முதன்முறையாக ஒட்டக பால் விற்பனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. 500 மில்லி லிட்டர் ஒட்டகப் பால் 50 ரூபாய் என அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக குஜராத் மாநிலம் காந்திநகர், அகமதாபாத், கட்ச் பகுதிகளில் இருந்து ஒட்டகப் பால் வாங்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இந்தப் பாலை கெடாமல் 3 நாட்கள் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஒட்டக பால் சாக்லேட்டையும் அறிமுகப்படுத்தியது அமுல் நிறுவனம். மேலும் ஒட்டகப் பாலில் இன்சுலினுக்கு இணையான புரதம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது எனத் தெரிவித்திருக்கிறது.