இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்று இரண்டு சாதிகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறி வந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது தன்னை மிகப்பெரிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) என்று வர்ணித்தார்.
ஒருவரைச் சிறியவர், ஒருவரைப் பெரியவர் என்று கருதும் இந்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினராக இருந்தாலும், அவர்களைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நீதி வழங்க முடியாது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.