போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ.
போபர்ஸ் பீரங்கிகள் ஊழல் தொடர்பாக புகார் கூறப்பட்ட இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான, அனைத்து வழக்குகளையும் 2005-ம் ஆண்டு மே 31-ம் தேதி டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்போது சி.பி.ஐ., திட்டமிட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியானது.
சில நாட்களுக்கு முன், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக, தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 12 ஆண்டுகளுக்கு பின் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சி.பி.ஐ., கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறுகையில், 12 வருடங்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து கோர்ட்டில் சி.பி.ஐ., ஏராளமான விளக்கங்கள் அளிக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர். மேலும் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. தரப்பில் விசாரணைகள் உடனடியாக தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 30-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.