செப்டம்பர் 5 இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள், இந்நாள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க பார்வையற்ற ஆசிரியரை மாணவர்கள் இழிவுபடுத்தும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கண்டனத்தைப் பெற்று வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் துறையில் பிரியேஷ் என்ற பார்வையற்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது சில மாணவர்கள் அவரைக் கேலி கிண்டல் செய்ததோடு பார்வையற்றவர் என்பதால் அலட்சியமாக வகுப்பு நேரத்தில் செல்போன்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதேபோல் பேராசிரியர் நடந்து செல்லும் போது ஒரு மாணவர் அவரைக் கேலி செய்யும் காட்சியும் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்ளும் காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் முகமது பாசில், நந்தன சாகர், ராகேஷ், பிரியதா, ஆதித்யா, பாத்திமா நஃப்லாம் ஆகிய 6 பேர் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த ஆறு மாணவர்களும் மாணவிகளும் அந்த பேராசிரியரிடத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளனர் என்றாலும் ஆசிரியர் தினத்தன்று வைரலாகும் இந்த வீடியோ காட்சி அனைவரின் கண்டனத்தையும் பெற்று வருகிறது.