தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் 60 வயது மேற்பட்ட தம்பதியர். பார்வையற்றவர்களான இவர்கள், அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தங்களது 30 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் வீட்டில் இருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகோல் காவல் நிலைய போலீசார், பார்வையற்ற தம்பதியரின் வீட்டை சோதனையிட்டனர். அந்த சோதனையில், அங்கு அந்த தம்பதியின் மகன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து விசாரிக்கையில், 4 நாட்களுக்கு முன்பாக மகன் உயிரிழந்தது கூட தெரியாமல், அந்த தம்பதியினர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், தனது மகனிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்காததால், அவர்கள் உணவு தண்ணீர் இன்று 4 நாட்களாக இருந்துள்ளனர். இதனால், அவர்கள் சரியாக பேச முடியாமல் அரை மயக்கத்தில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, பார்வையற்ற தம்பதியரை மீட்டு அவர்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டு, வேறொரு பகுதியில் வசிக்கும் மூத்த மகனுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பின்னர், அந்த தம்பதியரை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்தது கூட தெரியாமல் உடலுடன் வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.