மேற்குவங்க பாஜக பிரமுகர் ஒருவர் வெளியிட்ட ஆடியோ மேற்குவங்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.03.2021) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் ஏழு கட்டத் தேர்தல் நடைபெற உள்ளன.
இதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான மம்தா, பாஜக முக்கியத் தலைவரான சுவேந்து அதிகாரியின் கோட்டை எனக் கருதப்படும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தச் சூழலில், தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி பேசியதாக அத்தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நந்திகிராம் தொகுதியின் பாஜக துணைத் தலைவர் பிரனாய் லால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தன்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸுக்காகத் தேர்தல் வேலை பார்க்குமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக மம்தா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவிவரும் சூழலில், இந்த ஆடியோ விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுவேந்து அதிகாரியை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என ஆவேசமாகப் பேசிவரும் மம்தா, திரைமறைவில் பாஜகவினரின் உதவியை நாடியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.