மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50 பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி வருவதற்கான ஏற்பாடுகளையும், டெல்லியில் தங்குவதற்கான ஏற்பாடுளையும் பாஜக கட்சி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி மட்டும் 303 தொகுதிகளையும், கூட்டணியுடன் 353 தொகுதிகளையும் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். இவருடன் 65 அமைச்சர்கள் கொண்ட மத்திய அமைச்சரவை பதவி ஏற்கவுள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நாளை இரவு 07.00 PM மணியளவில் நடைப்பெறும் விழாவில் நரேந்திர மோடிக்கு பிரதமர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்பிக்களுக்கும் குடியரசுத்தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், பல்வேறு கட்சியின் தலைவர்கள் உட்பட 7000 பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் அமர்ந்து பதவி ஏற்பு விழாவை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக பிரதமர் பதவி ஏற்பு விழாவை காண பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கட்சி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றி அந்த மாநிலத்தில் தனிப்பெறும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.