குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24). பட்டதாரி பெண்ணான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவளப் பிரிவில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் வரும் ஜூன் 11 ஆம் தேதி தன்னை தானே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்து திருமண முறைபடி அவரது திருமணம் நடைபெறவுள்ளது. அண்மையில் சமூக வலைதளத்தில் இதனை அறிவித்த ஷாமா பிந்து, “சுய அன்பின் வெளிப்பாடாக இதைக் கருத வேண்டும். திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால், மணப்பெண்ணாக இருக்க விரும்புகிறேன்'' எனத் தெரிவித்திருந்தார். மேலும், பெற்றோரின் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடப்பதாகவும், திருமணத்திற்குப் பிறகு கோவாவுக்கு தேனிலவு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஷாமா பிந்துவுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், சிலர் இதை ஒருவகையான மனநோய் என்றும் விமர்சித்து வருகின்றனர். இத்திருமணம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள குஜராத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சுனிதா சுக்லா “பிந்து மனநிலை சரியில்லாதவர். இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். அவர் தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்தக் கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார். இந்து கலாச்சாரத்தில் ஆண் ஆணையோ, பெண் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறினார்.