மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இதுவரை எந்த உடன்படும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, குடியரசுத்தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இந்தப் பேரணியை தடைசெய்யக் கோரி மத்திய அரசின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 18.01.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லிக்குள் நுழைவது என்பது சட்ட ஒழுங்கு தொடர்பான விவகாரம் என்றும், அதுகுறித்து காவல்துறைதான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனு மீதான விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தடை மனுவை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ‘விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். விவசாயச் சட்டம் தற்போது அமலில் இல்லை. அதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்யுங்கள். ஒருவேளை இந்தச் சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தால், இதேபோல் அமைதியான வழியில் போராட்டத்தை தொடரலாம். ஆனால், ஒருபோதும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் உங்கள் போராட்டம் இருந்துவிடக்கூடாது. உங்கள் நிலைப்பாட்டினை சற்று மாற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தை சுமுகமான முறையில் தீர்க்க பார்க்கிறோம். நீதிமன்றம் அமைத்த குழுவின் முன் நீங்கள் ஆஜாராக முடியாது என தெரிவிக்கிறீர்கள். இவ்வளவு விடாப்பிடியாக இருந்தால் நல்ல முடிவினை நோக்கிப் பயணிக்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.