திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை அவமதித்ததாக கூறி இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் புதுச்சேரியில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க முடியாத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்புடன் மிக குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றது. இதனால் பேருந்தின் முகப்பு கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த பாஜகவினர் சிலர் பள்ளியை விடுமுறை அறிவித்து மூடுமாறு வற்புறுத்தியுள்ளனர். காலாண்டு தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அளிக்க முடியாது என பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பள்ளியில் குழந்தைகளை விட வந்த மாணவர்களின் பெற்றோர்கள் பாஜகவினரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற முதலியார் பேட்டை போliiசார் பள்ளியில் இருந்து பாஜகவினரை வெளியேற்றினர்.