பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகர் ஆவர். இவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி அமர காரணமானவர் மற்றும் அவரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநில முதல்வராக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் ஆலோசகராக உள்ளார். ஜெகன் கட்சியின் அபார வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை தான் காரணம். ஏனென்றால் எந்த மாவட்டத்தில் நமக்கு வெற்றி உள்ளது.
கட்சித் தொண்டர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என அனைத்து ஆலோசனைகளையும் ஜெகனுக்கும், அவர் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் வழங்கி வந்தார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றது. அதே போல் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளார். அதற்காக ஒரு மாதத்திற்குள் மேற்கு வங்கம் சென்று பணியை பிரசாந்த் மேற்கொள்ள உள்ளார்.
ஏனெனில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. இன்னும் சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைப்பெற உள்ளதால், அதற்கான ஆலோசனைகளை முதல்வர் மம்தாவுக்கு வழங்கவும், தேர்தல் திட்டங்கள் குறித்து வகுக்க உள்ளார். அரசியல் மட்டுமல்லாமல், உளவுத்துறை, சமூக வலைததளங்களில் அதிக நுணுக்கம் உள்ளவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.