பஞ்சாப் மாநில காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். மேலும், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது முதல் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார்.
இதன்தொடர்ச்சியாக அண்மையில் பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில் இன்று மத்திய அமைச்சரும், பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை கேப்டன் அமரீந்தர் சிங் சந்தித்தார்.
அதன்தொடர்ச்சியாக பாஜக-அமரீந்தர் சிங் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், "7 சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் (அமரீந்தர் சிங்கின்) பஞ்சாப் லோக் காங்கிரஸும் இணைந்து போட்டியிடப் போகின்றன என்பதை இன்று உறுதிப்படுத்துகிறேன். தொகுதி பங்கீடு போன்றவை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இதுதொடர்பாக கேப்டன் அமரீந்தர் சிங், "நாங்கள் தயாராக உள்ளோம், இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். வெற்றி வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தொகுதி பங்கீடு செய்யப்படும். இந்த தேர்தலில் நாங்கள் 101% வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.