
ஆந்திராவில் கண்டெய்னர் லாரி மீது மோதி தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் அருகே பாகாலா பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் காரில் பயணித்துள்ளனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியுள்ளது. இதில், அந்த கார் லாரியின் அடியில் புகுந்து முழுவதுமாக சிக்கி உருக்குளைந்து நசுங்கியது.
இந்த கோர விபத்தில், காரில் பயணித்த 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு பாகாலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.