ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்ற ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தொடர் தேடுதலுக்குப் பிறகு 12 ஆம் தேதி காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
மேலும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இறுதியில் சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது. அதே சமயம் திருப்பதி நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்திருந்த நிலையில் இரண்டாவதாக ஒரு சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிடிபட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதையொட்டி பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பிற்காகக் கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி இருந்தது. மேலும் திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள நரசிம்மர் கோவில் பகுதியில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதே சமயம் அலிபிரி மலைப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பது வனத்துறையினர் பொருத்தி இருக்கும் கேமராக்களில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.