இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகப் பெரிய பிரச்சார தளமாக இருந்துவருகிறது. சமூகவலைதளங்களிலும் குறிப்பாக ஃபேஸ்புக்கைதான் அரசியல் கட்சிகள் அதிகமாக பயன்படுத்திவருகின்றன. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகள் விளம்பரங்களுக்காக ரூ. 4 கோடிக்கு மேல் இதுவரை செலவிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களுக்கென ஓவ்வொரு அரசியல் கட்சியும் தனி பிரிவை உருவாக்கி அதன் மூலம் தங்களது பிரச்சாரங்களை தொடங்கி நடத்திவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் விளம்பரங்களை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுவும் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை அதவாது ஒரு மாதத்திற்குள் அரசியல் உள்ளிட்டவைகள் தொடர்பாக 16,556 விளம்பரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர்கள் சுமார் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மன் கீ பாத் நிகழ்ச்சிக்கு, 1,168 விளம்பரங்கள் வந்துள்ளதாகவும் அதற்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நேஷன் வித் நமோ நிகழ்ச்சிக்கு 52 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும், மை கவெர்ன்மெண்ட் இந்தியா எனும் திட்டத்திற்கு 25 லட்சத்து 27 ஆயிரமும் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கில் பாஜக என்ற பக்கத்திற்கு 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கங்கள் சிலவற்றிற்கு 48 ஆயிரம் ரூபாய் விளம்பர செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.