18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மல்லிகா அர்ஜூன கார்கே பேசுகையில் “மக்கள் தீர்ப்பை நாங்கள் மனதார ஏற்கிறோம். இது மக்களின் முடிவு. இது ஜனநாயகத்தின் வெற்றி. இது மக்களுக்கும் மோடி அரசுக்குமான போட்டி என நாங்கள் கூறி வந்தோம். மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த முறை, எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. குறிப்பாக ஒரே நபர் ஒரு முகம் எனத் தங்களை கூறிக்கொண்ட பாஜக உட்பட யாரும் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. எனவே இது பாஜகவின் அரசியல் தோல்வி.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஆணவத்துக்கு கிடைத்த தோல்வி இது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. மோடி பேசிய பொய்களை மக்கள் நிராகரித்து விட்டனர். தார்மீக வெற்றியைப் பாஜக இழந்துள்ளது. அகங்காரத்தால் பாஜக தோற்றுள்ளது. மக்களுக்கும் மோடிக்கும் நடந்த போட்டியில் மக்கள் வென்றிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் வெற்றி மக்களுக்கான வெற்றி, ஜனநாயகத்துக்கான வெற்றி. இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.